ஒவ்வொரு மாணவர்களும், எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பதைவிட எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம் என சந்திரயான்- 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா கல்வி குழும மாணவர்களுடன் சந்திரயான் – 3 குறித்து அதன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கலந்து கொண்டார். அப்போது, மாணவர்களுடன் வீரமுத்துவேல் கலந்துரையாடினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேல், சந்திரயான் 3 மிஷன் முடிந்து விட்டது. இதுவரை யாரும் போகாத இடங்களில் சந்திரயான் இறக்கப்பட்டது. நிலவிற்கு மனிதர்களை அனுப்புவது என்பது நீண்டகால திட்டம். அதற்கான முன்னெடுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றது. நிலவிற்கு மனிதர்கள் விரைவில் செல்வார்கள். இதே போல, இஸ்ரோவில் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.
மாணவர்களுக்கு படிப்பது மட்டுமே முக்கியம். கல்லூரியில் இருந்து வெளியே வரும் போது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நாம் எந்த பள்ளியில் படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல, எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஏனென்றால், நான் அரசு பள்ளியில் இருந்து வந்தவன்தான். இதனால், மாணவர்கள் நிறைய ஆராய்ச்சி திட்டங்களை வகுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.
மேலும், சந்திராயன் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தவறான குற்றத்சாட்டு என்றவர் விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற நாடுகளுக்கு இணையாக பாரதமும் செயல்பட்டு வருகிறது என்றார்.