இன்றையப் போட்டியில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்றையப் போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் தேர்வுச் செய்தார். அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர்.
இதில் விக்ரம்ஜித் சிங் 2 வது ஓவரில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு அடுத்த ஓவரிலேயே மேக்ஸ் ஓ’டவுட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இவர்களை தொடர்ந்து வெஸ்லி பாரேசி மற்றும் கொலின் அக்கர்மேன் களமிறங்கினர். இருவரின் கூட்டணி சற்று சிறப்பாக விளையாடி வந்தது. இருப்பினும் வங்கதேசத்தின் பந்தை சரியாக அடிக்க முடியாமல் நிதானமாக விளையாடி வந்தனர்.
13 ஓவர்கள் வரை விக்கெட் ஏதும் இழக்காமல் நிதானமாக விளையாடி வந்த கூட்டணி 14 வது ஓவரில் பிரிந்தது. வெஸ்லி பாரேசி 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 41 பந்துகளுக்கு 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடி வந்த கொலின் அக்கர்மேன் அடுத்த ஓவரிலேயே 33 பந்துகளுக்கு 15 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் களமிறங்கினார். சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய ஸ்காட் 89 பந்துகளில் 68 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய பாஸ் டி லீடே 17 ரன்களிலும், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 35 ரன்களிலும் ஆட்டமிழக்க லோகன் வான் பீக் 23 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் மகேதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷகிப் அல் ஹசன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனால் வங்கதேச அணிக்கு 230 ரன்கள் வெற்றி இலக்காக உள்ளது