நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்படுவது குறித்து ஆராய வருகை தந்திருக்கும் பா.ஜ.க. குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர்.
தமிழகத்தில் தி.மு.க. அரசால் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, தமிழக தி.மு.க. அரசால் பா.ஜ.க.வினர் எதிர்கொள்ளும் பிரச்னை மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, அக்கட்சி மேலிடம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவில், முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவும் அடக்கம்.
இந்த சூழலில், மேற்கண்ட 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்றிரவு சென்னை தி.நகரிலுள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வருகை தந்தனர். பின்னர், காவல் துறையால் கைது செய்யப்பட்ட பா.ஜ.க.வினரிடம், எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டனர் என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேட்டறிந்தனர்.
அப்போது, பொய் வழக்குப் போடப்பட்டிருந்தால், பா.ஜ.க. தலைமையில் இருந்து கட்டாயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியையும் அளித்தனர். இதன் பிறகு, இக்குழுவினர் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளின் வீடுகளுக்கு இன்று காலை சென்றனர். மேலும், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
அதேபோல, பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்புறம் இருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர். தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்றவர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் அரசியல் ரீதியாக பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்படுவதாகவும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.