இதுவரை நடந்தது சாம்பிள்தான் என்பதுபோல, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இனி மேல் விமானப்படைத் தாக்குதல், தரைப்படைத் தாக்குதல், கடற்படைத் தாக்குதல் என முப்படைகளின் மூலம் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருக்கிறது.
இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை அரங்கேற்றினர். அறிவிக்கப்படாத இத்தாக்குதலால் இஸ்ரேல் நிலைகுலைந்து போனது. மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வான், கடல், தரை வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகளி, ஏராளமான இஸ்ரேலியர்களை ஈவு இரக்கமின்றி சுட்டும், தலையை வெட்டியும் கொலை செய்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாவும் பிடித்துச் சென்றனர்.
இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதனால், வெகுண்டெழுந்த இஸ்ரேல், பதிலடித் தாக்குதலை தொடங்கியது. இத்தாக்குதல் 23-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்த 22 நாட்களில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்திருக்கிறது. மேலும், தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட 600-க்கும் மேற்பட்ட நிலைகளையும் அழித்திருக்கிறது.
அதேசமயம், இத்தாக்குதலில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் 8,000 பேர் கொல்லப்பட்டிருப்பதுதான் சோகம். எனினும், ஹமாஸ் தீவிரவாதிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்துவதுதான் இதற்குக் காரணம் என்றும், மக்கள் வசிப்பிடங்களில் ஹமாஸ் தீவிரவாதிகள் முகாம்களை அமைத்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் விளக்கம் அளித்திருக்கிறது. கடந்த சில தினங்களாக இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், தற்போது முப்படைத் தாக்குதலில் ஈடுபடப்போவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டிருக்கும் வீடியோவில், “அக்டோபர் 7-ம் தேதி மனித குலத்துக்கு எதிரான ஒரு குற்றத்தை ஹமாஸ் தீவிரவாதிகள் செய்திருக்கிறார்கள். இஸ்ரேல் போரை தொடங்கவில்லை. நாங்களாக போரைத் தேடிச் செல்லவில்லை. ஹமாஸ் இஸ்ரேல் மீதும் நாட்டு மக்கள் மீதும் அறிவிக்கப்படாத தாக்குதலை நடத்தியது. இவை இரண்டுமே போர்க் குற்றங்கள்.
மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். ஆகவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை புதிய கட்டத்தை நோக்கி நகர்த்தவிருக்கிறோம். காஸாவில் தரை, கடல் மற்றும் வான்வழித் தாக்குதலை நடத்தப் போகிறோம். ஆகவே, காஸாவின் தெற்குப் பகுதியை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து செல்ல வேண்டும். எங்களது போர் காஸா நகர மக்களுக்கு எதிரானது அல்ல, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரானது.
ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் மக்களோடு மக்களாக ஒளிந்துகொண்டு, மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகவேதான், தீவிரவாதிகளையும், பொதுமக்களையும் வேறுபடுத்தும் வகையில், ஹமாஸ் கோட்டையிலிருந்து பொதுமக்கள் தற்காலிகமாக வெளியேறும்படி பல்வேறு தகவல் தொடர்பு வழிகள் மூலம் எச்சரித்து வருகிறோம். மேலும், காஸாவின் தெற்கு பகுதியில்தான் தண்ணீர், உணவு, மருந்துப் பொருட்கள் என வெளிநாடுகளில் இருந்து வரும் மனிதாபிமான உதவிகளும் கிடைக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையே. நேற்று காஸா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவ வீரர்கள், அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இஸ்ரேல் கொடியை ஏற்றி இருக்கின்றனர். இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில் பேசும் நபர், “கொடூரமான குற்றத்திற்கு 3 வாரங்களுக்குப் பிறகு, 401-வது படைப்பிரிவின் 52-வது பட்டாலியனின் வீரர்கள் காஸா நகரின் மையப் பகுதியில் இஸ்ரேல் நாட்டின் கொடியை ஏற்றி இருக்கிறார்கள். நாங்கள் மறக்க மாட்டோம். வெற்றி வரும் வரை நிறுத்த மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடந்துவரும் தரைப்படைத் தாக்குதலின் மூலம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான இரண்டாம் கட்டப் போர் தொடங்கி இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறார். மேலும், “கொலைகார எதிரியை தோற்கடித்து, நமது நாட்டில் நமது இருப்பை உறுதி செய்வதே இஸ்ரேலின் குறிக்கோள். அதை இரண்டாம் சுதந்திரப் போர் என்று இஸ்ரேல் என்று அழைக்கிறது.
இப்போர் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கலாம். ஆனாலும், நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எதற்கும் தயாராக இருக்கிறோம். தாயகத்தைக் காக்க இஸ்ரேல் போராடும். எதிரிகளை தரைக்கு மேலேயும் தாக்குவோம், தரைக்கு உள்ளேயும் தாக்குவோம். இருளுக்கு மேல் ஒளி, மரணத்தின் மீது வாழ்க்கை. இதுதான் எங்களது வாழ்க்கையின் நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.