தொடர் வெற்றி பெறுமா இந்தியா அல்லது தொடர் தோல்வி அடையுமா இங்கிலாந்து ?
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இந்தியா இதுவரை விளையாடிய முதல் 5 லீக் போட்டிகளிலும் தோல்வியையே சந்திக்காமல், தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதனால், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்தும், தோல்வியையே சந்திக்காத இந்திய அணி புள்ளிப்பட்டியல்ல் மீண்டும் முதலிடம் பிடிக்கவும் இன்று மோதியுள்ளன.
உள்ளூரில் நடைபெறுகிறது என்ற கூடுதல் பலத்துடன் நடப்பு உலகக் கோப்பையில், இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி ஷமி, பவுலிங் யூனிட்டை மேலும் வலுவானதாக மாற்றியுள்ளார். பீல்டிங்கில் மட்டும் இந்திய அணி மேலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மறுமுனையில் இங்கிலாந்து அணியில் ஆகச்சிறந்த வீரர்கள் இருப்பினும், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளனர். எனவே மோசமான நினைவுகளை மறந்து, புத்துணர்ச்சியுடன் இன்று களமிறங்கினால் மட்டுமே வெற்றிக்காக போராட முடியும். அதேநேரம், இன்றைய போட்டி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான லக்னோ மைதானத்தில் நடைபெறுவது, இங்கிலாந்து அணிக்கு சிக்கலாக அமைந்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 57 முறையும், இங்கிலாந்து அணி 44 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிய, 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாகவே அமைந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
எனவே, பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே ரன்களை சேர்க்க முடியும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வை செய்வது சாதகமாக அமையலாம்.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்திய அணி 66% வெற்றி பெரும் என்றும் இங்கிலாந்து அணி 34% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.