ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 20 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது 200 கோடி ரூபாய் தரவேண்டும் என்று மீண்டும் மிரட்டில் விடுக்கப்பட்டிருக்கிறது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராகவும் திகழும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு, மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். அந்த இ-மெயிலில், “எனக்கு நீங்கள் 20 கோடி ரூபாய் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர்ஸ் இருக்கிறார்கள்” என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுகுறித்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் மும்பை காம்தேவி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஷதாப் கான் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஷதாப் கானையும் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், முகேஷ் அம்பானிக்கு 2-வது முறையாக நேற்று மீண்டும் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மிரட்டல் விடுத்த அதே நபர்தான் மீண்டும் மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்த இ-மெயிலில், “நான் ஏற்கெனவே 20 கோடி ரூபாய்தான் கேட்டேன். ஆனால், எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே, தொகையை உயர்த்த முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் எனக்கு இனி 200 கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மும்பை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த இ-மெயில் எங்கிருந்து வந்திருக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.