தமிழகத்தில் ஆளுநர் மாளிகைக்கு முன்புறம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழக ஆளுநராக இருப்பவர் ஆர்.என்.ரவி. இவர், ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழக தி.மு.க. அரசுக்கும், ஆளுநருக்கும் ஏழாம் பொறுத்தமாக இருந்து வருகிறது. சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்யும் அளவுக்கு தி.மு.க.வினரின் அராஜகம் இருந்து வருகிறது.
ஏற்கெனவே, மயிலாடுதுறைக்குச் சென்றபோது, தி.மு.க.வினரால் ஆளுநர் வாகனம் தாக்கப்பட்டது. இதுகுறித்து ஆளுநர் மாளிகைத் தரப்பில் புகார் செய்யப்பட்டும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து ஆளுநர் மாளிகைத் தரப்பில் புகார் செய்யப்பட்டும், கருக்கா வினோத்தை மட்டும் கைது செய்து விட்டு, தனது கடமை முடிந்து விட்டதாக தமிழக காவல்துறை கப்சிப்பாகி விட்டது. இதற்கு ஆளுநர் மாளிகைத் தரப்பிலும், தமிழக பா.ஜ.க. தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டபோதிலும், தமிழக காவல்துறை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான், தமிழக ஆளுநர் மாளிகையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும். அதேசமயம், ராஜ்பவன் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
குண்டு வீசிய நபருக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவரைச் செய்ய வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், ராஜ்பவன் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். அப்போதுதான் முழு உண்மையும் வெளிவரும். ஏற்கெனவே, பா.ஜ.க. அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய அதே நபா்தான் ஆளுநா் மாளிகை மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்.
அதேபோல, ஏற்கெனவே மயிலாடுதுறை செல்லும்போது ஆளுநரின் வாகனத்துக்கு பின்னால் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலையில், சாதாரண மக்கள், கூலி வேலை செய்யும் நபா்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வா் இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கோவையில் ஆா்ப்பாட்டத்தின்போது பாலஸ்தீனக் கொடி பயன்படுத்தப்படுகிறது. சென்னை விளையாட்டு மைதானத்தில் பாகிஸ்தான் வாழ்க கோஷம் ஒலிக்கிறது. தேசத்துக்கு எதிரான செயல்களும், தேசவிரோத செயல்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, ஆளுநா் மாளிகை மீதான தாக்குதல் குறித்து சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரணை அவசியமானது.
தமிழகத்தில் பா.ஜ.க.வினா் மீது கடுமையான பிரிவுகளில் பதியப்படும் வழக்குகள் குறித்து விசாரிக்க நால்வா் குழுவை பா.ஜ.க. தேசியத் தலைமை நியமித்திருக்கிறது. இக்குழு அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தேசியத் தலைவா் உரிய நடவடிக்கை எடுப்பாா்” என்றாா்.