சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாகவும், திறமையற்ற அரசாக இருப்பதாகவும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சனம் செய்திருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அந்த வகையில், நவம்பர் 7-ம் தேதி 20 தொகுதிகளுக்காகன முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது, “இந்த காங்கிரஸ் அரசு இளைஞர்களை ஏமாற்றி விட்டதா இல்லையா? பெண்களுக்கு தருவதாகச் சொன்ன 500 ரூபாய் ஒவ்வொரு மாதமும் கிடைத்ததா?
மதுபான ஊழல் நடந்ததா இல்லையா? பூபேஷ் பாகல் மதுவைத் தடை செய்வதாக உறுதியளித்தார். ஆனால், மதுவை தடை செய்வதற்கு பதிலாக, அவர் அரசு வேலைகள் ஆட் சேர்ப்பில் ஒரு மோசடி செய்தார். சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் அரசு ஊழலில் ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு உரிமை இல்லை. ஒரு முதல்வரின் செயலாளர் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
ஊழல் செய்ததற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும். ஆகவே, பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் மக்களை நேரில் சென்று சந்தித்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்த, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வற்புறுத்த வேண்டும்” என்றார்.