ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தற்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. 23-வது நாளான இன்றும் இஸ்ரேல் இராணுவம் காஸா நகரின் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. போதாக்குறைக்கு காஸா எல்லைக்குள் பீரங்கி, டாங்கிகளும் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இது தவிர, இனி வான், கடல், தரை என முப்படைகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான விவேக் ராமசாமி, தனக்கென தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் குடியரசுக் கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றிய விவேக் ராமசாமி, “தனது கையில் உள்ள அனைத்து அதிகாரங்களையும், பலத்தையும் பிரயோகித்து ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் முற்றிலுமாக நசுக்க வேண்டும். இஸ்ரேல் யூதர்களின் நாடு. புனித நோக்கங்களுக்காக, அந்த புனிதத் தலத்தை புனிதப் பரிசாக யூதர்கள் பெற்றிருக்கிறார்கள்.
பலம் எனும் ஒரு மொழிதான் எதிரிகளுக்கு புரியும் என்றால், தன் நாட்டைக் காக்க அதனை பிரயோகிக்க இஸ்ரேல் தயங்கக் கூடாது. இரு நாடு தத்துவம் சரிப்படாது என்று இஸ்ரேல் கருதினால் அதை செயல்படுத்தலாம். பாலஸ்தீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழையவும், வசிக்கவும் அரபு நாடுகள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீனர்களை பொறுப்பில் எடுத்துக்கொள்ள தயங்கி, தங்கள் நாடுகளுக்குள் சேர்க்கவும் மறுத்து, இஸ்ரேலை மட்டும் கண்டிக்கும் வழிமுறையை அரபு நாடுகள் கைவிட வேண்டும்.
எந்த அரசியல்வாதியும் இந்த உண்மையை பேச விரும்புவதில்லை. ஆனால், நான் பேசுவேன். ஹமாஸ் அமைப்பினரின் 100 முதன்மை தலைவர்களின் தலைக்கு விலை வைத்து மீண்டும் ஒரு “அக்டோபர் 7″ சம்பவம் நடைபெறாதவாறு செய்து, தனது நாட்டினருக்கான எதிர்கால எல்லையை பலப்படுத்த இஸ்ரேலால் முடியும் என நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். விவேக் ராமசாமியின் இந்த அதிரடிக் கருத்து அரசியல் விமர்சகர்களால் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இப்போரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் நாட்டுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். மேலும், அந்நாட்டு ஆதரவாக போர்க்கப்பல்களை அனுப்பி இருப்பதோடு, ஆயுதங்களையும் அமெரிக்க வழங்கி வருகிறது. அதேபோல, இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராகவும் அமெரிக்க வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.