ரோபோ சங்கர் ஆணழகன் போட்டியில் கலந்துக் கொண்டு மிஸ்டர் மதுரை, மிஸ்டர் தமிழ்நாடு போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துப் பாராட்டுக்களை பெற்றார். இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு மிஸ்டர் மதுரை, மிஸ்டர் தமிழ்நாடு போன்ற பட்டங்களை பெற்றுள்ளார். இவர் ரோபோ போல் உடலை அசைத்து ரசிகர்களை கவர்ந்ததால் தான் இவருக்கு ரோபோ சங்கர் என பெயர் வந்தது.
நல்ல உடல் வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து காணப்பட்டார். இதையடுத்து இவர் பல முயற்சிகளுக்கு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.
இந்நிலையில், ரோபோ சங்கர் மதுரையில் நடைபெற்ற 37 -வது ஆண்டு ஆணழகன் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினருக்கான பிரிவில் தனது கட்டுமஸ்தான உடல் பாவனைகளைச் செய்துகாட்டி அசத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.