ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் ரோஹித் சர்மாவின் சாதனைகள்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது.
இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்ற நிலையில் ஆறாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து முதல் முறையாக இந்திய அணி இந்த தொடரில் முதல் பேட்டிங் செய்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் 9 ரன்களிலும் விராட் கோலி டக் அவுட் ஆகியும் ஸ்ரேயாஸ் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் அபாரமாக விளையாடி வந்தார்.
ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். 66 பந்துகளில் அரை சதம் கடந்த ரோகித் சர்மா நடப்பாண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் கடந்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்தார்.
இந்த சாதனையை சச்சின் 1997 வது ஆண்டும் அசாருதீன் 1998 ஆண்டும் படைத்திருக்கின்றார்கள். அதன்பிறகு கங்குலி இரண்டு முறையும், தோனி இரண்டு முறையும், விராட் கோலி மூன்று முறையும் இந்த சாதனையை படைத்திருக்கும் நிலையில் தற்போது ரோகித் சர்மா முதல் முறையாக இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.
இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களைக் கடந்து ரோகித் சர்மா மற்றொரு சாதனையை படைத்திருக்கிறார். அதிக ரன்கள் அடித்திருக்கும் இந்திய வீரர்கள் பட்டியலில் தற்போது ரோகித் சர்மா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
இதேபோன்று நடப்பு உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் ரோஹித் சர்மா படைத்திருக்கிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு கிடைத்திருக்கிறது.