‘பாரத்’ என்ற பெயரை, ‘கூகுள் மேப்’ தளத்தில் குறிப்பிட்டால், நம் நாட்டின் வரைபடம் மற்றும்
தேசியக்கொடியுடன், தெற்காசியாவில் உள்ள நாடு என காண்பிப்பதாக நெட்டிசென்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்வ தேச நிகழ்ச்சிகள் மற்றும் உள்நாட்டு நிகழ்ச்சிகளில், நம் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக, ‘பாரத்’ என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டு பெயர்களும் இடம்பெற்றுள்ளதால், பாரத் என்ற பெயரை பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேடு தள நிறுவனமான கூகுளின் மேப் தளத்தில், பாரத் என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு தேடினால், நம் நாட்டின் வரைபடம் மற்றும் தேசியக்கொடியுடன் தெற்காசியாவில் உள்ள நாடு என்று காண்பிப்பதாகவும், ஆங்கிலத்தில் மட்டும் இன்றி ஹிந்தி மொழியில் தேடினாலும், இவ்வாறே காட்டுவதாக நெட்டிசென்கள் குறிப்பிடுகின்றனர்.
சிலர், ஆங்கிலத்தில் இந்தியா என குறிப்பிட்டாலும், அது ஹிந்தியில் பாரத் என்றே காட்டுவதாகவும் கூறுகின்றனர்.
கூகுள் மேப் போல அந்நிறுவனத்தின் தேடு தளம், செய்தி தளங்கள் என அனைத்திலும் இதேபோன்று தான் காண்பிப்பதாகவும் இந்த புதிய மாற்றத்தை அனைத்து பயனாளர்களாலும் காணமுடியாது எனவும், படிப்படியாக இந்த பெயரை சுட்டிக்காட்டும் வகையில் இந்நிறுவனம் அதன் தளங்களை மேம்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.