இஸ்ரேல் இராணுவத்தின் மீது வெடிகுண்டுகளை வீசிய, மூன்று ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணைகள் வீசப்பட்டதால் இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இதன் பிறகு, காஸா நகரின் மீது இஸ்ரேல் அசுரத் தாக்குதல் நடத்தி வருகிறது
தற்போது, இந்த போர் தீவிரமடைந்துள்ளது. இதுவரை பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் 110 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், 29 வயதிலிருந்து 31 வயதுடைய 3 பேர் இன்று அதிகாலை நேரத்தில் பாலஸ்தீனத்தின் இரமல்லா பகுதியின் வடமேற்கிலுள்ள பெய்ட் ரிமா, நப்லு பகுதியில் உள்ள அஸ்கர் அகதிகள் முகாம் மற்றும் வடக்கே உள்ள டுபாஸ் நகர் ஆகிய 3 இடங்களில் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
மூன்று இடங்களிலும் ஹமாஸ் தீவிரவாதிகளைத் தேடும் முயற்சியில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டு வந்தது. இதில் மறைவிடங்களில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் இராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இந்த மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 1967-ல் இஸ்ரேல்-அரேபிய போர் நடைபெற்ற போது மேற்கு கரை பகுதியை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அந்த காலகட்டத்திலிருந்து ஹமாஸ் தீவிரவாதிகளைத் தேடி இஸ்ரேல் வேட்டையாடி வருவது தற்போது வரை தொடர்கதையாகி வருகிறது.