ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு, மீண்டும் பணி நியமனத் தேர்வு அறிவித்திருப்பதைக் கண்டித்து, திருச்சியில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், 2 ஆயிரத்து 222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டி தேர்வு, வருகிற 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, பணி நியமனத்துக்குக் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று திருச்சியில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் கூறியதாவது, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு தரப்பினருக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதில், 20 ஆயிரம் பேருக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும், இன்னும் பணி வழங்கப்படவில்லை. தேர்தலின் போது, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின், 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதியவர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, உறுதி அளித்தனர். ஆனால், தற்போது பணி நியமனத்துக்கு, போட்டித் தேர்வு நடத்தப் போவதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் வாயிலாக, 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுவர். அ.தி.மு.க., ஆட்சியின் போது, எதிர்க்கட்சியாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆசிரியர் நியமனத் தேர்வை இரத்து செய்வோம் என, தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார். தற்போது, நியமன தேர்வு நடத்தப்படும் என, அரசாணை வெளியாகி உள்ளது என்று கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன், அமைச்சர் அலுவலக தரப்பினரும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற 31-ஆம் தேதி சென்னையில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.