திருப்பூரை, அடுத்த திருமுருகன்பூண்டி நகர பா.ஜ சார்பில், பிரதமரின் மனதின் குரல் டி.வி கானொளி நிகழ்ச்சியை கட்சியினர் மற்றும் பொது மக்கள் பார்வையிட தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து, அதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் முருகன், பேசியதாவது, ” பிரதமரின் மனதின் குரல், நூறு நாட்களை கடந்து சென்று கொண்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை நிலகிரி தொகுதியில் 500 க்கு மேற்பட்ட இடங்களில் பொது மக்கள், கட்சியினர் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு, பார்வையிட்டு உள்ளனர்” என்று கூறினார்.
மேலும் அவர், ” மாநில தலைவரின் என் மண் என் மக்கள் பாதயாத்திரைக்கு பொது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. பா.ஜ விற்கு மக்களின் ஆதரவு பெருகி உள்ளது. குடிநீர் இணைப்பு, இலவச காஸ் இணைப்பு, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மக்களுக்காக செய்து வருகிறது.
அதனை தேர்தலின்போது, மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். அத்தி கடவு – அவிநாசி திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. அதனை தி.மு.க அரசு வேண்டுமென்றே செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தி.மு.க வினர் அரசியல் செய்யாமல், திட்டத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
நிலகிரி தொகுதியில் ஊழலின் ஊற்று கண் ராஜா எம்.பி. யாக உள்ளார். அதில் இருந்து அவரை அகற்ற வேண்டும். வரும் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும். நிலகிரி தொகுதியில் பா.ஜ. க வை வெற்றி பெற செய்ய பாடுபட வேண்டும் ” என்று கூறினார்.