கேரள மாநிலத்தில் யெகோவாவின் சாட்சிகள் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், 12 வயது சிறுமி ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில் நேற்று காலை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. யெகோவாவின் சாட்சிகள் என்கிற கிறிஸ்தவ சமூகத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் இக்குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 2 பெண்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் கேரளா மட்டுமன்றி, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது தீவிரவாதிகளின் சதிச் செயலாக இருக்குமோ என்கிற அச்சத்தில், தேசியத் தலைநகர் டெல்லி மற்றும் நிதித் தலைநகர் மும்பை ஆகிய இடங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், இத்தாக்குதலை நடத்தியது நான்தான் என்று கூறி, அதே சமூகத்தைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூரிலுள்ள கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். எனினும், சரணடைவதற்கு முன்பு மார்ட்டின் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், நான்தான் குண்டு வெடிப்பை நிகழ்த்தினேன்.
நான் ஏன் இதைச் செய்தேன் என்பதை தெளிவுபடுத்துவதற்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” என்று கூறியிருக்கும் மார்ட்டின், “யெகோவாவின் சாட்சிகள் சபையைச் சேர்ந்தவர்கள் தேசிய விரோத கருத்துக்களை பரப்புகிறார்கள். இதைத் தடுக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ஆகவே, இச்சம்பவத்தை அரங்கேற்றினேன்” என்று கூறியிருக்கிறார்.
சரி, அப்படி என்ன தேசிய விரோத கருத்துக்களை பரப்புகிறார்கள்? யார் இந்த யெகோவா சாட்சிகள் சபையினர்? என்பதை பார்க்கலாம்.
யெகோவாவின் சாட்சிகள் சபை 1870-ம் ஆண்டில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச கிறிஸ்தவப் பிரிவாகும். இது கிறிஸ்தவத்தின் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறது. அதேசமயம், உலகம் மிக விரைவில் அழிந்துவிடும் என்பதை நம்புகிறது. இச்சமூகம் இயேசு கிறிஸ்துவை நம்புகிறது. ஆனால், அவர் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று நம்புவதில்லை.
இச்சமூகத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வழங்கும் இணையதளமான Jw.org, சமூகம் இயேசுவின் பெயரில் ஜெபங்களைச் செய்கிறது என்று கூறுகிறது. மேலும், “இயேசு ஒவ்வொரு மனிதனுக்கும் தலைமை அல்லது அதிகாரம் கொண்டவராக நியமிக்கப்பட்டவர் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறுகிறது.
எனினும், இது கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் பிற மதக் குழுக்களில் இருந்து வேறுபட்டது என்றும் வலைத்தளம் கூறுகிறது. உதாரணமாக, இயேசு கடவுளின் குமாரன், கிறிஸ்துவத்தின் ஒரு பகுதி அல்ல என்று பைபிள் போதிப்பதை நாங்கள் நம்புகிறோம். ஆன்மா அழியாதது என்று நாங்கள் நம்பவில்லை.
“கடவுள் மக்களை நித்திய நரகத்தில் சித்திரவதை செய்கிறார் அல்லது மத நடவடிக்கைகளில் முன்னணியில் இருப்பவர்கள் மற்றவர்களை விட அவர்களை உயர்த்தும் பட்டங்களை வைத்திருக்க வேண்டும் என்று வேதத்தில் எந்த அடிப்படையும் இல்லை” என்று இணையதளம் மேலும் கூறுகிறது.
jw.org இன் படி, 1905-ம் ஆண்டு முதல் இந்தியாவில் யெகோவாவின் சாட்சிகள் உள்ளனர். இச்சமூகம் 1926-ம் ஆண்டு மும்பையில் ஒரு அலுவலகத்தை நிறுவியது. 1978-ல் சட்டப்பூர்வ பதிவு பெற்றது. தற்போது இந்தியாவில் இச்சமூகத்தைச் சேர்ந்த 60,000 பேர் இருக்கிறார்கள். அதேபோல, ஒருவரின் நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கும், வெளிப்படுத்துவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை உண்டு என்கிற இந்திய அரசியலமைப்பின் உத்தரவாதங்களின் மூலம் இச்சமூகம் பயனடைகிறது.
“யெகோவாவின் சாட்சிகள் பொதுவாக இந்தியாவில் தடையின்றி வழிபடுகிறார்கள். இருப்பினும், சில மாநிலங்களில் கும்பல் தாக்குதல்கள் மற்றும் பிற மத சகிப்புத்தன்மையற்ற செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் இணையதளம் கூறுகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இச்சமூகத்தினர் தேசிய கீதம் பாட மாட்டார்கள் என்பதுதான். காரணம், அது அவர்களது இறை நம்பிக்கைக்கு எதிரானது என்று கருதுகிறார்கள்.