பாகிஸ்தானில் இந்து மதத்துக்கு எதிராக தீவிர மதவெறுப்பு பிரசாரம் செய்து வந்த பிரச்சாரகர் தாரீக் ஜமீலின் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான், தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அதேபோல, இந்து மதத்துக்கு விரோதமான நாடாகவும் இருந்து வருகிறது. இந்நாட்டில் இந்துக்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இந்துக்களை தாக்குவது, இந்துக் கோவில்களை தகர்ப்பது, இந்துப் பெண்களை கடத்திச் சென்று, கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்து கொள்வது என்று பாகிஸ்தானில் நடக்கும் அத்துமீறல்கள் சொல்லி மாளாது.
இது ஒரு புறம் இருக்க, இந்து மத வெறுப்புப் பிரச்சாரமும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி இந்து மதத்துக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்வதில் முதன்மையானவர் மௌலானா தாரீக் ஜமீல். இவரது மகன் அஸீம் ஜமீல்தான் பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பாகிஸ்தானின் கானேவால் மாவட்டம் துலம்பா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மகன் உயிரிழந்ததை தாரீக் ஜமீலும் உறுதி செய்திருக்கிறார்.
இது குறித்து தாரீக் ஜமீல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மகன் எதிர்பாராத விதமாக மரணமடைந்து விட்டார். அவருக்காக அனைவரும் பிரார்த்தியுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
இது தொடர்பாக உள்ளூர் காவல்துறை அதிகாரி மியான் சனுன் சலீம் கூறுகையில், “மௌலானா அஸீம் ஜமீல் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார்” என்று தெரிவித்தார்.
எனினும், இது தற்கொலையா? அல்லது மோதல் சம்பவத்தில் நிகழ்ந்ததா? என்பது குறித்தும் பாகிஸ்தான் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அஸீம் ஜமீல் மரணத்துக்கு பாகிஸ்தான் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பையில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி 172 பேரை கொலை செய்தனர். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரரன் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில்தான் பதுங்கி இருக்கிறான். இவனது மகன் கமாலுதீன் சயீத் சமீபத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.