ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல, மற்றொரு சம்பவத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் தலைவிரித்தாடிய தீவிரவாதம், கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகிறது. எனினும், புதிது புதிதாக தீவிரவாதிகள் முளைத்து வருகிறார்கள். மேலும், பாகிஸ்தான் எல்லையிலிருந்தும், ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் இருந்தும் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் தும்சி நவ்போரா பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த வாலிபர் ஒருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் உயிரிழந்தார்.
விசாரணையில், அந்த வாலிபர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பதும், கூலித் தொழிலாளியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தும் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி.) வழியாக ஊடுருவ முயன்ற ஒரு தீவிரவாதியை இராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு நேற்று தொடங்கிய தேடுதல் வேட்டையில், குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரின் ஜுமாகுண்ட் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி கொல்லப்பட்டார். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.
அதேபோல, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ஈத்கா அருகே தீவிரவாதிகளால் காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர் இன்ஸ்பெக்டர் மஸ்ரூர் அகமது என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது.