ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியிலிருந்து, 4 ஆயிரம் கன அடியாக குறைந்து உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
தற்போது, கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக, ஒகேனக்கல்லில் கடந்த 9 தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.
இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால், இன்று காலை ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 4 ஆயிரம் கன அடியாக குறைந்து உள்ளது. இதன்காரணமாக, மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறாகப் பாய்ந்து ஓடுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை, தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் இருந்து மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.