குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக, குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்றும் காலையில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு 23 மில்லிமீட்டர் மழை பதிவானது.
மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அம்பை, இராதாபுரம், களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் பாளையில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளில் சேர்வலாறில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
இதேபோல், தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் இடையிடையே, கனமழை பெய்து வருகிறது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடியில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டியது.