பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி விவகாரத்தில் சென்னை மாநகராட்சி தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் வாகன எண் ஜே.சி.பி. இயந்திரத்தினுடையது இல்லை என்பதும், அது ஒரு டி.வி.எஸ். நிறுவனத்தின் சூப்பர் எக்ஸ்எல் வாகனத்தின் பதிவு எண் என்பதும் தெரியவந்திருக்கிறது.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்புறம் இருந்த கொடிக்கம்பத்தை கடந்த 21-ம் தேதி காவல் துறையினரும், மாநகராட்சி ஊழியர்களும் அகற்றினர். இதற்கு, பா.ஜ.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, கானாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக, பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சூழலில்தான், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் சேதப்படுத்திய ஜே.சி.பி. வாகனத்தின் பதிவு எண் என்று சொல்லி, சென்னை மாநகராட்சித் தரப்பில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பதிவு எண் டி.வி.எஸ். நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் வாகனத்தின் பதிவு எண் என்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து அமர் பிரசாத் ரெட்டியின் வழக்கறிஞர் பால்கனகராஜ் கூறுகையில், “கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில், அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்திருக்கும் போலீஸார், அவர் மீது மேலும் 2 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். கோட்டூர்புரம் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய காவல்நிலையங்களில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, கானாத்தூர் போலீஸார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்திருப்பதற்கு முக்கியக் காரணமே, ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்தியதாகத்தான். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சித் தரப்பில் அந்த வாகனத்தின் பதிவு எண் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வாகன எண்ணை ஆராய்ந்து பார்த்தால் அது ஒரு டி.வி.எஸ். வாகனத்தினருடையது.
அதேபோல, அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டம் பாயப்போவதாக தகவல் கசிகிறது. ஆனால், இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதால், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கூடாது என்று ரிட் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம். இதனிடையே, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு நீதிமன்றம் ஒருநாள் போலீஸ் கஸ்டடி கொடுத்திருக்கிறது” என்றார்.