பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மரியாதை செலுத்த வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக பலத்த கோஷம் எழுப்பப்பட்ட நிலையில், அவரது கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னுக்கு சாதாரண வாகனத்தில் வராமல், பலத்த பாதுகாப்புடன் சிறப்பு வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவரைப் பார்த்ததும் சிலர், எடப்பாடி ஒழிக.. எடப்பாடி ஒழிக.. போன்ற கண்டன கோஷங்களை எழுப்பியவாறு காரை முற்றுகையிட முயன்றனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வந்தார். அப்போது, முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருந்த சிலர், கடந்த ஆண்டு அஞ்சலி செலுத்த வராதவர், இப்போது வந்திருப்பது ஏன்? வரும் மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொண்டே பழனிசாமி பசும்பொன் வந்திருக்கிறார் என்று கண்டனக் குரல் எழுந்தன.
இந்த நிலையில், முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்திவிட்டு, திரும்பிச் சென்ற எடப்பாடி பழனிசாமி கார் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் காலணியை வீசினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி வாகனம் நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டது. இச்சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.