இன்று இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று நோக்குகிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், குஜராத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, “இன்று என் கண்முன்பு சிறிய இந்தியாவின் வடிவம் தெரிகிறது. மாநிலங்கள், மொழிகள், கலாசாரங்கள் வேறுவேறாக இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் நடந்த நிகழ்வுகள், ஜனவரி 26-ம் தேதி கர்தவ்ய பாதையில் அணிவகுப்பு மற்றும் நர்மதைக் கரையில் ஒற்றுமை நாள் கொண்டாட்டங்கள் ஆகியவை தேச எழுச்சியின் 3 சக்திகளாக மாறி இருக்கின்றன.
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளில் இந்தியாவை செழிக்கச் செய்ய வேண்டும். நமது இந்தியாவை நாம் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பான 25 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவுக்காக தன்னை தியாகம் செய்திருக்கிறார்கள். தற்போது, அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இன்று இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்றுநோக்குகிறது. ஜி20 மாநாட்டில் இந்தியாவின் திறமையைக் கண்டு உலகமே வியப்படைந்திருக்கிறது. பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நமது எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
அடுத்த சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். உலகில் வேறு எந்த நாடும் அடைய முடியாத நிலவின் பகுதியை இன்று இந்தியா அடைந்திருக்கிறது. இது நமக்கு பெருமை அளிக்கிறது. தேஜாஸ் போர் விமானங்கள் முதல் ஐ.என்.எஸ். விக்ராந்த் வரை அனைத்தையும் இந்தியாவே தயாரித்து வருகிறது.
இந்தியாவில், நமது தொழில் வல்லுநர்கள் உலகின் பில்லியன் டாலர் நிறுவனங்களை இயக்கி வழிநடத்துகிறார்கள். உலகின் பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் மூவர்ணக் கொடியின் பெருமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது இளைஞர்கள் சாதனைகளை முறியடித்து, பதக்கங்களை வெல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று கூறினார்.