போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைவது போன்றது. ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகள் ஏவி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தனர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் அசுரத்தனமாக பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 8,500 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 25-வது நாளாக இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, முதலில் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தரை வழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கிறது.
இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருகின்றனர். எனவே, போரை நிறுத்தினால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றவர்களை விடுவிப்பதாகக் கூறி வருகின்றனர். இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுசபையும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இந்த நிலையில்தான், போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைவதற்குச் சமம். ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் தீவிரவாதத்திடம் சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. இந்தப் போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஆனாலும், இந்தப் போரில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
வெற்றி வரும் வரை காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கு எதிராக இஸ்ரேல் நிற்கும். பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அல்லது இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா எப்படி போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லையோ, அதேபோல அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸுடனான விரோதப் போக்கை நிறுத்த இஸ்ரேல் உடன்படாது.
மேலும், போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள் என்பது இஸ்ரேலை ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைய வேண்டும், தீவிரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுவது போலாகும். ஆகவே, அது ஒருபோதும் நடக்காது. இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கவில்லை, விரும்பவில்லை. ஆனாலும், இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்” என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.