சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி, அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரத்திற்கு பின் 565 சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை, ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் நாடு முழுவதும் ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குஜராத்தில், நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின நிகழ்வுகள், ஜனவரி 26-ஆம் தேதி கர்தவ்ய பாதையில் நடைபெறும் அணிவகுப்பு, நர்மதா நதிக்கரையில் நடைபெறும் ஒற்றுமை தின விழா ஆகிய மூன்றும் தேச எழுச்சியின் மூன்று சக்திகளாக மாறியுள்ளதாகக் கூறினார்.
இதனை அடுத்து, இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர், ஏக்தா நகரில் நடைபெற்ற இராணுவ வீராங்கனைகளின் சாகச நிகழ்ச்சியையும், விமான படை சாகச நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகச் சந்திரனுக்குச் சென்றதைக் குறிப்பிடும் வகையில் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பரதநாட்டியம், கதக் உள்ளிட்ட பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.