நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்பட வெற்றிவிழாவுக்கு வரும் ரசிகர்கள், பாஸ் உடன் ரசிகர் மன்ற அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் மட்டுமே விழா அரங்கில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் லியோ. இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவருவதற்கு திமுகவினர் பல தடைகளை ஏற்படுத்தியதாகவும், அதையும் தாண்டி படம் வெளிவந்தது.
லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடத்த அதன் தயாரிப்பு நிர்வாகம் திட்டமிட்டது. அதிக அளவிலான ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால், இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தயாரிப்பாளர் தரப்பில் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், லியோ திரைப்பட வெற்றிவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காகப் படக்குழு சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதன்படி, நவம்பர் மாதம் 1-ம் தேதி நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. லியோ வெற்றி விழா நவம்பர் 1-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.
நேரு ஸ்டேடியத்தில் மொத்தம் 8 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. அதில் 6 ஆயிரம் இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரங்கிற்குப் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என்றும், சுமார் 200 முதல் 300 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லியோ திரைப்பட வெற்றிவிழாவுக்கு வரும் ரசிகர்கள், பாஸ் உடன் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கு வரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தினாலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால், நடிகர் விஜய் ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.