இண்டி கூட்டணி தீவிரவாத அமைப்புகளை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறியிருக்கிறார்.
கேரளாவில் கடந்த 29-ம் தேதி நடந்த கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், ஒரு சிறுமி மற்றும் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கேரள மாநில அரசை கடுமையாக விமர்சித்த மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலைப்பாடே இதற்குக் காரணம் என்று விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, சமூக வலைதளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறி, மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மீது கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, “வாக்கு வங்கி அரசியலின் பெயரில் இன்று பினராயி விஜயன் அரசு அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது.
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம், மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மீது பொய் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. கேரள அரசு இதுபோன்று நடந்துகொள்வது இது முதல் முறையல்ல.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஹமாஸை புகழ்கிறார்கள். இண்டி கூட்டணி தீவிரவாத அமைப்புகளை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது. பொய் வழக்குகளைப் பதிவு செய்வதிலும் வேகமானவர்கள். மத்திய அமைச்சர் மீது பதிந்த வழக்கை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்” என்று கூறினார்.