சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே, இறப்புக்கான காரணம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு ஒரு வாரத்துக்கு முன், தீவிர காய்ச்சல் இருந்துள்ளது. அவருடைய நிலைமை மோசமடைந்த நிலையில், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவரை பரிசோதத்தில் டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதியானது. இந்த நிலையில், உள்ளுறுப்புகளில் இரத்த கசிவு, கிருமி தொற்றால் ஏற்படும் இரத்த அழுத்தப் பாதிப்பு இருந்து உள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், உயிர் இழந்தார்.
அதேபோல, பூந்தமல்லியைச் சேர்ந்தவர் இராஜ் பாலாஜி. டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக, கடந்த 29-ஆம் தேதி மாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர காய்ச்சல் மற்றும் செப்டிக் ஷாக் பாதிப்புக்குள்ளான நிலையில், கிருமி தொற்று தீவிரம் அடைந்து அன்று இரவே உயிரிழந்துள்ளார்.
கடைசி நேர சிகிச்சையே அவர்களின் இறப்புக்குக் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருவரின் உயிரிழப்புகளுக்கும், டெங்கு காய்ச்சல் தான் பிரதான காரணமா என, மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்து வருவதாக, பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.