மேற்கு வங்கம் சிங்கூரில் கார் தயாரிப்பு நிறுவனம் துவங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்து, இது தொடர்பாக அன்றைய இடது சாரி அரசுடன் 2006-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இதில், ஆயிரம் ஏக்கர் டாடா நிறுவனத்திற்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மம்தா பானர்ஜி, விவசாயிகளிடம் இருந்து நிலம் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுவதாகக் கூறி அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தினார்.
இதனால், இந்த திட்டம் அன்றைய குஜராத் முதல்வர் மோடியின் ராஜதந்திரம் காரணமாக, ஆனந்த் நகருக்கு அதிரடியாக மாற்றப்பட்டது. அங்கு, ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது.
தமது நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனம் மீது டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்து. விசாரணை முடிவில், சிங்கூர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்பட்ட மேற்கு வங்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 766 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதனால், மேற்கு வங்க அரசு அபராத தொகையைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.