கொங்கு மண்டலமான நாமக்கல் மாநகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த திருக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே, கடந்த 2009 -ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்காக சுமார் 67 லட்சம் மதிப்பில் திருக்கோவிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டு நிறைவு பெற்றன. இதனையடுத்து, இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்கோவில் வளாகத்தில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை, வர்ண தீர்த்தம், புனிதப் படுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திரவிய பிரபஞ்ச வேள்வி, மகா சாந்தி ஹோமம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் 10:30-க்குள் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.