அமெரிக்காவில் 24 வயதான இந்திய மாணவர் அமெரிக்க இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் தெலங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஆசிரியர் இராமமூர்த்தி என்பரின் மகன் பூச்சா வருண் ராஜ். 24 வயதான இவர், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இண்டியானா மாகாணத்தில் வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படித்து வருகிறார். இவர், சம்பவத்தன்று வால்பரைசோ நகரிலுள்ள உடற்பயிற்சி மையத்துக்குச் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த ஜோர்டான் ஆண்ட்ராட் என்கிற அமெரிக்க இளைஞர், வருணை சரமாரியாகக் கத்தியால் குத்தி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த வருண், ஃபோர்ட் வெயினில் உள்ள லுத்ரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வருண் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 5 சதவீதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையடுத்து, கத்தியால் குத்திய ஜோர்டான் ஆண்ட்ராட் என்ற அமெரிக்க இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தியது மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும், இந்தியாவில் உள்ள வருணின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் வருண் குணமடைவார் என்று நம்பிக்கைத் தெரிவித்தனர். மேலும், இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
ஜோர்டான் ஆண்ட்ராட் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “மசாஜ் செய்வதற்காக உடற்பயிற்சி மையத்துக்கு வந்தேன். அந்த அறையில் யாரும் இல்லாததால், மற்றொரு அறைக்குச் சென்றேன். அங்கிருந்த வருணை பார்த் போது, வித்தியாசமாகத் தெரிந்தார். அவரால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி, அவரை கத்தியால் குத்தினேன்” என்றுகூறியிருக்கிறார்.