நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை யொட்டியுள்ள பொது மக்கள் வசிக்கும் வீடுகளில் சமையல் எண்ணெய் வாசத்தை வைத்து, வீடுகளுக்குள் கரடி புகுந்து அங்குள்ள சமையல் எண்ணெய்யை ருசி பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது மக்கள் எளிதில் பார்க்க முடியாத வன விலங்குகளில் கரடியும் ஒன்று. குளிர் மிகுந்த பகுதிகளில் மட்டுமே கரடிகள் வாழும் தன்மை கொண்டவை.
தமிழகத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. அந்த வகையில், இதுவரை யானை, புலி, சிறுத்தையிடம் சிக்கி கால்நடைகளும், மனிதர்களும் உயிரிழக்கும் நிலை இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கரடியும் இணைந்துள்ளது.
இப்போது உணவுக்காக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் கரடி இடம் பெயர்ந்து வருகிறது. பலரையும் தாக்கி வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்காகவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வருகிறது.
பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் ஆள் இல்லாத வீடுகளில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் கரடிகள், வீட்டில் உள்ள உணவுகளை ஒரு கை பார்க்கிறது.
அதுவும், சமையல் எண்ணெய், நெய் என்றால் கேட்க வேண்டாம். அப்படியே ரசித்து ருசித்து குடித்துவிடுகிறதாம். இப்படி பலரது வீட்டிலும் கரடியின் கால் தடம் நிறையவே பதிந்துவிட்டதாம். எனவே, மக்கள் உயிர் பலி ஏற்படும் முன்பு வனத்துறை விழித்துக் கொண்டால் சரி. என்ன செய்யப் போகிறது திமுக அரசு.