தவறான தகவல் பரப்பப்பட்டதின் காரணமாகவே, கத்தாரில் 8 இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கத்தார் நாட்டிடம் இல்லை என்று கடற்படை வீரர்களின் உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் 8 பேர், கத்தார் நாட்டில் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். அப்போது, கத்தார் நாட்டின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை உளவுபார்த்து இஸ்ரேலுக்கு தெரிவிப்பதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கில் மேற்கண்ட 8 பேருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், மேற்கண்ட 8 பேரும் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றவில்லை. தவறான தகவல் பரப்பப்பட்டதால்தான் 8 பேரும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கத்தார் நாட்டிடம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதுதொடர்பாக, கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் வீரர்களின் உறவினர் ஒருவர் கூறுகையில், “ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள் உளவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் கத்தார் நாட்டிடம் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அத்தகவலை அந்நாடு பகிரங்கப்படுத்தவும் இல்லை.
ஆனால், மேற்கு ஆசிய ஊடகங்கள்தான் இந்திய கடற்படையினர் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் உளவு பார்த்ததாக தவறான தகவல்களை பரப்பினர். இதன் காரணமாகவே, 8 இந்திய வீரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், இந்திய வீரர்கள் யாரும் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபடவில்லை. கத்தார் நாட்டின் கடற்படைத் திட்டத்துக்கு உதவுவதற்காகவே சென்றனர்.
அதேபோல, இந்திய வீரர்கள் யாரும் நீர்மூழ்கித் திட்டத்தில் பணியாற்றவில்லை. மேலும், தஹ்ரா குளோபல் நிறுவனமும், கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளிக்கவும், கப்பல்களை பராமரிப்பதற்கும் இத்தாலிய கப்பல் உற்பத்தி நிறுவனமான ஃபின்காண்டியேரியின் துணை ஒப்பந்ததாரராகத்தான் பணியாற்றியது.
மேலும், தஹ்ரா குளோபல் நிறுவனம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு ஒரு ஆதரவு தீர்வு வழங்குநராக இருந்தது. அதோடு, தஹ்ரா குளோபல் ஓமனில் உள்ள தஹ்ரா இன்ஜினியரிங் மற்றும் சர்வீசஸ் எல்.எல்.சி.யின் துணை நிறுவனமாகும். மேலும், இந்நிறுவனம் கத்தார் மற்றும் ஜி.சி.சி. நாடுகளை முதன்மையாக ஆதரிக்கிறது.
அந்த வகையில், தஹ்ரா குளோபல் நிறுவனம், கத்தார் கடற்படைக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்காக, இந்திய முன்னாள் கடற்படை வீரர்களை வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் இந்திய கடற்படையில் இருந்தபோது மிகவும் நேர்மையுடனும், மரியாதையுடனும் நாட்டிற்கு சேவை செய்தார்கள்.
அப்படி இருக்க, மேற்கண்ட கடற்படை வீரர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டை சுமத்தி மரண தண்டனை விதித்திருப்பது அவர்களது குடும்பத்தினரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. மேலும், இது இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு விவகாரம். இதை மிகுந்த எச்சரிக்கையுடனும், உணர்வுடனும் கையாள வேண்டும்” என்றார்.
இது ஒருபுறம் இருக்க, முன்னாள் கடற்படை வீரர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மேற்கண்ட 8 பேரையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்துவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.