2055-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டில் 11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், அதை விட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா விவகாரம் சீரியஸானது என்று பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியிருக்கிறார்.
மேங்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. இவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி குழுமத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இவ்வாறு கேள்வி கேட்பதற்காக, மஹுவா மொய்த்ரா துபாயை அடித்தளமாகக் கொண்ட தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து வழக்கறிஞரும், மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலருமான ஜெய் அனந்த் தேஹாத்ராய் புகார் தெரிவித்தார். மேலும், அது தொடர்பான ஆதாரங்களையும் பா.ஜ.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபேவிடம் வழங்கினார். இதையடுத்து, மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்ற ஒழுங்கு கமிட்டியில் நிஷிகாந்த் துபே புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தது. இந்த விசாரணைக்காக, மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலரான வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் நிஷிகாந்த் துபே ஆகியோர் ஒழுங்கு கமிட்டி முன் ஆஜராகினர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, “என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால், எனது தலைமுடியைக் கூட தொட முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான எனது புகாரை நெறிமுறைகள் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறேன். மேலும், எனது வாக்குமூலத்தையும் நெறிமுறைக் குழுவிடம் அளித்தேன்.
மஹுவா மொய்த்ரா நாளை கமிட்டியின் முன்பு ஆஜராவார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 2-ம் தேதிக்குப் பிறகு பேசுவது நல்லது. மேலும், கடந்த 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக கேள்விக்கு 10,000 ரூபாய் வாங்கியதாக 11 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த விவகாரத்தை விட மஹுவா மொய்த்ரா விவகாரம் சீரியஸானது” என்றார்.