தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொள்ள பாரதப் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஊழலுக்கு எதிராகவும், மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் வகையிலும் , என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த யாத்திரையை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா யாத்திரையை தொடங்கி வைத்தார். மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் என் மண் என் மக்கள் யாத்திரை செல்ல உள்ளது. 1,700 கிலோ மீட்டர் கால் நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையானது சென்னையில் நிறைவடையவுள்ளது. ஜனவரி 11 -ம் தேதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுவரை 51 நாள் யாத்திரை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை பொதுமக்களிடம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தி உள்ளதால், அதன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரை வழங்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவும், அதேபோல, குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்குப் பாரதப் பிரதமர் மோடி நேரில் அடிக்கல் நாட்டவும் உள்ளார் என்று கூறப்படுகிறது.
பாரதப் பிரதமர் வருகையை மத்திய பாஜக தலைமையோ அல்லது தமிழக பாஜக தலமையோ அல்லது மத்திய அரசோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், விரைவில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி வருகைதர உள்ளார் என்ற தகவல் வெளியானதும் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.