ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டும், தேசத்திற்காகப் பாடுபட்ட மகான்கள் நினைவைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம்.
காஷ்மீர் முதல் கேரளா, மேற்குவங்கம் என்று நாட்டின் அனைத்து பகுதிகளும் அணி வகுப்பு ஊர்வலங்கள் அமைதியாகவும், நேர்த்தியாகவும் நடைபெற்றது.
இந்த ஆண்டு விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தத் தமிழகக் காவல்துறையிடம் 2 மாதங்களுக்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டும், அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தினர். சில மாவட்டங்களில் விண்ணப்பங்களை நிராகரித்தனர்.
இந்நிலையில், அக்டோபர் 22, 29 -ம் தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குமாறு கடந்த 16 -ம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், காவல்துறை அனுமதிக்கவில்லை.
இதனால், ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்பதால், வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது அரசின் நிர்வாகத் திறமையை காட்டுவதாகவும் , நீதிமன்ற உத்தரவை அரசு மதிப்பளிக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது என நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும், இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.