உலகின் சிறந்த 55 நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குவாலியர் மற்றும் கேரளாவின் கோழிக்கோடு ஆகிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின், உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் ஏற்கெனவே 295 நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு மேலும் 55 சிறந்த நகரங்களை தேர்ந்தெடுக்க யுனெஸ்கோ முடிவு செய்தது.
அதன்படி, யுனெஸ்கோவின் இயக்குனர் ஆட்ரி அசோலே தலைமையிலான குழு 55 நகரங்களை தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குவாலியர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழிக்கோடு ஆகிய நகரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் தங்களது வளர்ச்சியில், கலச்சாரம் மற்றும் புதுமையை ஒன்றிணைத்து இயங்குவதாகவும், நகர்ப்புற வளார்ச்சிக்கு திட்டமிட்டு புதுமையான நடைமுறைகளைக் கொண்டு வந்திருப்பதாகவும் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்திருக்கிறது. அந்த வகையில், குவாலியர் சிறந்த ‘இசை’ கலச்சாரத்தை பெற்றிருப்பதாகவும், கோழிக்கோடு ‘இலக்கியம்’ பிரிவில் இடம் பிடித்திருப்பதாகவும் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்திருக்கிறது.
யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டீஸ் அமைப்பு, கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலை, வடிவமைப்பு, திரைப்படம், உணவு, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை ஆகிய 7 துறைகளின் அடிப்படையில் சிறந்த நகரங்களை தேர்ந்தெடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நகரங்கள் 2024 ஜூலை மாதம் போர்ச்சுகலில் நடக்கவிருக்கும் யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டீஸின் மாநாட்டில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இம்மாநாட்டின் கருப்பொருள் அடுத்த 10 ஆண்டு காலத்துக்கு இளையதலைமுறைகளை முன்னிருத்தும் விதமாக இருக்கும் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்திருக்கிறது.