பாரா ஆசியா விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி.
சீனாவின் ஹாங்சோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 வது ‘பாரா’ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 28 ஆம் தேதி நிறைவடைந்தது.
இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டனர்.
இதில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலத்துடன் 111 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்து, பதக்க பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது.
பதக்கங்களை வென்ற வீரர்கள் வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 4:30 மணிக்கு டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பதக்கங்களை வென்று சாதனை படைத்த வீரர்கள், வீராங்கனைகளை நேரில் சந்தித்து பாராட்டி அவர்களின் எதிர்கால போட்டிகளுக்கு ஊக்கப்படுத்தினார்.
மேலும் அவர், வெற்றி வாகை சூடிய வீரர்களின் பதக்கங்களை பற்றி அவர்களிடம் கேட்டறிந்தார், பின்னர் வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பிரதமரை நேரில் சந்தித்த வீரர்கள் வீராங்கனைகள் மகிழ்ச்சியின் உச்சியில் உள்ளனர்.