திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த மாநகராட்சி 14-வது வார்டு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் தனபால் பலரது கவனத்தையும் ஈர்த்தார். காரணம், இதுவரை யாரும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்திருந்தார்.
அது என்ன வென்றால், கூட்டம் நடைபெறும் தினம் அன்று அவர் வெள்ளை டி – சர்ட் அணிந்து வந்தார். முதலில் யாரும் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை. அது வித்தியமான மாடல் எனப் பலரும் நினைத்திருந்தனர். அப்போது, உற்றுப்பார்த்தபோது தான், விசயமே தெரிந்தது. அது அவரது வார்டில் உள்ள பிரச்சினைகளைக் கோர்வையாகக் கோர்த்து, போட்டோ எடுத்து, அதை டி – சர்ட்டில் பிரிண்ட் செய்து போட்டு வந்தது தெரிய வந்தது. இப்படி ஒரு ஐடியா நமக்கு வராமல் போச்சே என மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முணுமுணுத்தபடி இருந்தனர்.
அப்போது பேசிய 14-வது வார்டு பாஜக கவுன்சிலர் தனபால், எனது வார்டுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.
கடந்த ஒன்றை வருடங்களாகப் பாதாளச் சாக்கடை பிரச்சனை குறித்து பல்வேறு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, இதேபோல பல பிரச்சினைகள் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் கூட்டத்தில் வெறும் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றுகிறார்கள். தீர்வு கிடைக்கவில்லை.
இதனால்தான் எனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், வார்டு குறைகளைச் சட்டையாக அணிந்து வந்தேன் என்றார்.
பாஜக உறுப்பினர் தனபால் இப்படிச் செய்வார் எனத் தெரியாததால், மிரண்டுபோன திமுக மேயர், மாமன்றத்தில் இப்படி நம்மளை அசிங்கப்படுத்திட்டாங்களே எனக் கொதித்துப்போய் மறுப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளாராம்.
தமிழகம் முழுவதும் பாஜக கவுன்சிலர்கள் இது போல் கிளம்பி, உள்ளாட்சி பிரச்சனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்களாம்.