திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 1 கோடியே 12 இலட்சம் மதிப்பிலான, கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இதனை அடுத்து பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், 3 பயணிகளின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களைத் தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களின் உடலை ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்தனர். இதில், 3 பேரும் உடலில் மறைத்து 1 கிலோ 833 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்த ரூபாய் 1 கோடியே 12 இலட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.