இந்திரன் வந்தது, சந்திரன் வந்தது இந்த சினிமாதான். கலை வளர்ந்ததும் இங்கேதான், காதல் வளர்ந்ததும் இங்கேதான் என ஒரு திரைப்படத்தில் இசையமைப்பாளரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா பாடியிருப்பார்.
அவரது வைர வரிகளுக்கு ஏற்ப, தமிழக முதல்வராக இருந்த பலரும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களே. மேலும், தமிழகத்தில் திரையுலகில் இருப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கூடுதலாகவே கிடைத்து வருகிறது.
அந்த வகையில், தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த தமிழ் நடிகைகள் குஷ்பு, நயன்தாரா, சமந்தா ஆகியோருக்கு கோவில் கட்டி சிலை வைத்து ரசிகர்கள் தங்கள் அன்பைச் செலுத்தி வருகின்றனர்.
அதேபோல, தமிழ் திரையுலகில் உலக அளவில் அதிக ரசிகர்களைப் பெற்றுள்ள நடிகர் என்ற பெருமை ரஜினிகாந்த்தை மட்டுமே சாரும். இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மதுரையில் உள்ள ரசிகர் ஒருவர் கோவில் கட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. முன்னாள் துணை இராணுவப் படை வீரர். நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர் மதுரையில் அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவில்’ என்ற பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்குக் கோவில் கட்டியுள்ளார்.
சுமார் 250 கிலோ கருங்கல்லில் ரஜினிகாந்த்துக்குச் சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தி வருகிறார். தினசரி காலை, மாலை என 2 கால பூஜை நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள உள்ளூர் மக்களும், வெளியூரிலிருந்து வருபவர்களும், மறக்காமல் இந்த ரஜினி கோவிக்கு வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்களாம்.
மேலும், திரைப்பட சூட்டிங் அல்லது தென்மாவட்டங்கள் செல்லும் போது மறக்காமல் சர்ப்ரைஸ்ஸாக இந்த கோவிலுக்கு விசிட் செய்யவும் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளாராம்.
ஆன்மீகவாதியான ரஜினி கடவுள் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். அவர்போலவே, அவரது ரசிகர்களும் ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.