ஒளிப்பதிவாளர் போன்று வேஷம் போட்டு ரசிகர்களை பிரான்க் செய்த சூரியகுமார் யாதவ்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என்றால் இதில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் நெருக்கடியும் தொடர் பயிற்சியும் இருக்கும். இந்த நிலையில் வீரர்கள் மனதளவில் பாதிக்க கூடாது என்பதற்காக ஒவ்வொரு அணி நிர்வாகமும் பல பொழுதுபோக்கு விஷயங்களை செய்திருக்கிறது.
அந்த வகையில் இந்திய அணியை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் வைத்து பிசிசிஐ ஒரு பிராங்க் வீடியோவை செய்திருக்கிறது. அதன்படி மும்பையில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சி செய்தனர்.
அப்போது காலை ஓய்வு நேரத்தில் சூரியகுமார் யாதவ், பிசிசிஐ ஊடகக் குழுவுடன் சென்று பிராங்க் வீடியோ ஒன்றை செய்தார். அதில் சூரிய குமார் யாதவ் கேமரா மேன் ஆக வேடமணிந்து சென்றார். ரசிகர்களுக்கு தன்னுடைய முகம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்த சூரியகுமார் யாதவ், தன்னுடைய டேட்டூக்களை வைத்து கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக முழு கை சட்டை ஒன்றையும் அணிந்து கொண்டார்.
சூரியகுமார் யாதவ் மும்பையில் பிறந்து வளர்ந்ததால் இந்த பிராங்க் வீடியோவை செய்தார். அப்போது பல ரசிகர்களிடம் சூரிய குமார் பேட்டி எடுத்தார். அதில் யாருக்குமே சூரியகுமார் யாதவை அடையாளம் தெரியவில்லை. அப்போது ரசிகை ஒருவரை சூரியகுமார் யாதவ் பேட்டி எடுத்தார் அப்போது அந்த ரசிகை கேமரா மேன் ஆக வந்திருப்பது சூரியகுமார் தான் என்று தெரியாமல் சூரிய குமாருக்கு பல அறிவுரைகளையும் திட்டையும் வழங்கினார்.
அந்த ரசிகை பேசுகையில், சூரியகுமார் யாதவ் கொஞ்சம் பேட்டிங்கில் முன் வரிசையில் வந்து விளையாட வேண்டும். சூரிய குமாருக்கு பேட்டிங் செய்யவே வாய்ப்பு கிடைப்பதில்லை.
கிடைக்கும் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும். சூரியகுமார் யாதவ் தன்னுடைய பேட்டிங்கில் முன்னேற்றம் செய்துக் கொள்ள வேண்டும். தன்னை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த ரசிகர் கூறினார்.
இதை கேட்டவுடன் சூரியகுமார் யாதவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. உடனடியாக தன்னுடைய வேஷத்தை கலைத்துக் கொண்டு சூரியகுமார் யாதவ், அந்த ரசிகைக்கு ஷாக் கொடுத்தார்.
இதை அடுத்து இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். அங்கு மக்கள் கூட்டம் கூடுவதற்கு முன்பு உடனடியாக சூரியகுமார் யாதவ் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான நெருக்கடியான ஆட்டத்தில் சூரியகுமார் யாதவ் 49 ரன்கள் அடித்து அணியை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.