இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இரு நட்சத்திர ஆல்ரவுண்டர்கள் களமிறங்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளுக்கான ஓட்டத்தில் 3 மற்றும் 4 ஆகிய இடங்களுக்காக 4 அணிகள் தீவிரமாக போட்டியில் உள்ளன.
அதில் ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெறவில்லை என்றால், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் ஏற்படும். இதற்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக திடீரென நாடு திரும்புகிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் மிட்செல் மார்ஷ் விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.
அதேபோல் மிட்செல் மார்ஷ் எப்போது மீண்டும் இந்தியா திரும்புவார் என்பது குறித்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. டிராவிஸ் ஹெட் வந்த பின் 3 வது இடத்திற்கு மிட்செல் மார்ஷ் கொண்டு செல்லப்பட்டார்.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் எந்த அணிக்கும் எளிதாக சவால் அளிக்கும் வகையில் மிரட்டலாக அமைந்தது.
இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ப் விளையாடிய போது ஏற்பட்ட விபத்து காரணமாக மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் மிட்செல் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்க முடியாதது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் ஆடம் ஜாம்பாவிற்கு பின் இரண்டாவது ஸ்பின்னராக மேக்ஸ்வெல் தான் செயல்பட்டு வருகிறார். அதேபோல் பினிஷராக மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களாக ஆஸ்திரேலிய அணி யாரை பிளேயிங் லெவனில் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.