இஸ்ரேல் இராணுவம் காஸா நகரைச் சுற்றி வளைத்திருப்பதாகவும், விமானப்படை, கப்பல்படை மற்றும் தரைப்படை ஆகிய முப்படைகளும் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாவும் பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தவிர, இஸ்ரேலியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், முதியவர்கள் மற்றும் சிறுவர்களின் தலையைக் கொய்தும் கொடூரச் செயலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் அசுரத்தனமாக பதிலடி கொடுத்து வருகிறது. முதல்கட்டமாக வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் மற்றும் தீவிரவாத முகாம்களை தரைமட்டமாக்கியது. அதேபோல, முக்கியத் தலைவர்களையும் வான்வழித் தாக்குதல் மூலம் தீர்த்துக் கட்டியது.
இதையடுத்து, கடற்படை மூலம் ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியது. இதில், கடல் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மற்றும் முக்கியத் தளபதி ஒருவரையும் சுட்டுக் கொலை செய்தது. இந்த சூழலில், தற்போது கண்மூடித்தனமான தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் டாங்கிகள் காஸா நகருக்கள் ஊடுருவி தாக்குதலை நடத்தி வருகின்றன. அதேபோல, காலாட் படை வீரர்களும் காஸா நகருக்குள் ஊடுருவி ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டியாடி வருகின்றனர். இஸ்ரேல் நாட்டின் இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் 500 பேர் உட்பட காஸா நகரைச் சேர்ந்த 9,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், இஸ்ரேல் நாட்டின் கடற்படை மற்றும் காலாட்படை இணைந்து காஸா நகரை சுற்றி வளைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. காஸா நகரின் கடற்பகுதி முழுவதையும் இஸ்ரேலின் கடற்படை முற்றுகையிட்டிருக்கிறது. அதேபோல, இஸ்ரேலின் பீரங்கிகள் மற்றும் டாங்கிகள் காஸா நகரின் எல்லையை முற்றுகையிட்டிருக்கும் நிலையில், காலாட் படை வீரர்கள் காஸா நகரை சுற்றி வளைத்திருக்கிறார்கள்.
இந்த வீரர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகள் மற்றும் சுரங்கப் பாதைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை தேடிக் கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். அதேபோல, தீவிரவாத முகாம்களையும், தீவிரவாதத் தலைவர்களையும் கண்டுபிடித்து அழித்து வருவதோடு, தீவிரவாதிகளை கைது செய்து வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.