தறிகெட்டுக் கிடக்கும் காவல்துறைக்குக் கடிவாளம் போட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். காக்கி சட்டை உங்கள் நண்பன் என்ற நிலைமாறி, காக்கிக்குள் மிருகம் ஒளிந்துள்ளது என்பதைச் காவல்துறையில் உள்ள சிலர் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்குச் சாட்டையடி கொடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 2016 -ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பேசிக் கொண்டு இருக்கும் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அவர்களைச் சமாதானப்படுத்துவதற்குப் பதில், சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்ற விசாரணையில், சாதிப் பெயரைக் கூறி, குடும்பத்தினரைத் தாக்கிய உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், இழப்பீட்டுத் தொகையைச் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், 3 காவலர்களிடம் வசூலிக்க வேண்டும் என் நிபந்தனை விதித்ததோடு, இது தொடர்பாக 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
நாதியற்றவர்களுக்கு நீதிமன்றம் காவலன் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது.