டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவில் இருந்ததால், வெள்ளிக்கிழமை தொடர்ந்து புகை மூட்டத்தில் மூழ்கியது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைப்படி, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) 346 ஆக உள்ளது.
லோதி சாலை, ஜஹாங்கிர்புரி, ஆர்கே புரம் மற்றும் ஐஜிஐ ஏர்போர்ட் பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக உள்ளது, முறையே 438, 491, 486, மற்றும் 473 என (AQI) அளவீடுகள் உள்ளன. டெல்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக லோதி ரோடு பகுதியில் தண்ணீரை தெளித்து வருகிறது.
பொதுமக்களிடையே இருமல், ஜலதோஷம், கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன அடுத்த 5 நாட்களுக்கு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
டெல்லி அருகே உள்ள மாநில விவசாய நிலங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதாலும், சாதகமற்ற வானிலை நீடிப்பதாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மோசமான நிலையில்தான் இருக்கும் என வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.