சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் பைனாஸ் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவமான காசா கிராண்ட் கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள கட்டுமான தொழிலதிபர் கமலாக்கர் என்பவர் வீட்டில், இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அதுபோல, சென்னை அமைந்தகரை செனாய் நகர்ப் பகுதியில் கிழக்கு பூங்கா சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடத்திலும், காலை முதலே வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்து, சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக அருகில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் பிரபல பைனான்சியர் ஒருவரின் வீட்டிலும் ஐ.டி அதிகாரிகள் அதிரடியாகப் புகுந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, தமிழக பொதுப்பணித்துறைக்குப் பொருட்களை விநியோகித்து வரும் அமித் என்பவரின் வீட்டிலும் வருமானவரித்துறையினர் ஐ.டி. ரெய்டை துவக்கியுள்ளனர்.
சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் காரணமாகவே இந்த சோதனை நடைபெறுவதாகவும், சோதனை முடிவில் முழு விவரம் வெளியிடப்படும் என வருமானவரித்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.