தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தான் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிருபித்துவிட்டார் முகமது ஷமி.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 357 ரன்களை எடுத்தது.
அதைத் தொடர்ந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியை 20 ஓவர்களுக்குள் சுழற்றி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். அதுமட்டிமின்றி இந்தத் தொடரில் இந்திய அணியின் வெற்றி ஒரு முக்கிய காரணமாக பந்துவீச்சாளர்கள் திகழ்கிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணியின் முதல் 4 போட்டிகள் முகமது ஷமி அவர்கள் அணியில் இடம்பெறவில்லை. இந்திய அணி வங்கதேசத்துடன் விளையாடிய போட்டியில் காயம் ஏற்பட்டதன் மூலம் ஹர்திக் பாண்டியா மருத்துவ சிகிச்சையில் இருந்தார்.
ஆகையால் அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. அவருக்கு பதிலாக முகமது ஷமி அவர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் முகமது ஷமி. அவர் விளையாடிய முதல் போட்டியான நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவதாக களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் நேற்றையப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதும் பெற்றுள்ளார்.
இதன்மூலம் 3 போட்டிகளில் 14 விக்கெட்களுடன் உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை அவர் வெறும் 14 இன்னிங்ஸில் எடுத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஜாஹிர் கான் மற்றும் ஸ்ரீநாத் முறையே 23 மற்றும் 33 இன்னிங்ஸில் 44 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். இதனை தற்போது முகமது ஷமி முறியடித்துள்ளார்.
மேலும் கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை ஷமி எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் என்ற தனித்துவமான சரித்திர சாதனையை ஷமி படைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி உலகக் கோப்பையில் அதிக முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற மிட்சேல் ஸ்டார்க் சாதனையை ஷமி சமன் செய்துள்ளார்.
இதன்மூலம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தான் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிருபித்துவிட்டார் முகமது ஷமி.