தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 31.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 510 பேரும், ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்து 568 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 287 பேரும், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 282 பேரும் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 384 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்து 286 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 894 பேரும் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயனடையத் தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
பதிவு செய்தவர்கள் தொடர்பான மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.