கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, மாநிலம் முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாநிலத்தின் பல்வேறு நீர்நிலைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்டில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், சித்லகட்டா தாலுகா, தலகயலபேட்டா கிராமத்தில் சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில், ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாதிரி எடுக்கப்பட்ட பகுதிகளில், வைரஸ் பரவுவதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தலகாயலாபெட்டா பகுதியின், 5 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் கொசுக்களின் உற்பத்தி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலகாயலாபெட்டாவில் தலா இரண்டு நபர்கள் அடங்கிய, 53 குழுக்கள் அமைக்கப்பட்டு, 888 வீடுகளில் நேரடி ஆய்வு நடத்துகின்றன.
ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாக ஜிகா வைரஸ் பரவுகிறது. இதன் அறிகுறிகள், காய்ச்சல், தோலில் தடிப்புகள், தசை வலி, வயிற்று உபாதை, மூட்டுகளில் வலி, தலைவலி, சிவந்த கண்கள், சரும பாதிப்புகள் ஆகும்.
தற்போது வரை ஜிகா வைரஸ் பாதிப்புக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறப்பு சிகிச்சைகளும் இதுவரை எதுவும் இல்லை. ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் வந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, ஒட்டுமொத்த கிராமமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.